மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக கட்சிகளுடன் பேசத் தயார்: கர்நாடக காங்கிரஸ் எம்பி துருவநாராயணா பேட்டி

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக கட்சிகளுடன் பேசத் தயார்: கர்நாடக காங்கிரஸ் எம்பி துருவநாராயணா பேட்டி
Updated on
2 min read

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளுடன் பேசத் தயார் என கர்நாடக மாநில காங்கிரஸ் எம்பி துருவ நாராயணா கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் உரிமைக்காக மக்களவையில் குரல் கொடுத்துவரும் சாம்ராஜ்நகர் தொகுதி எம்பியான இவர் டெல்லி வந்திருந்தபோது ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

சுமார் 30 வருடங்களுக்கு முன்பே பேசப்பட்ட மேகேதாட்டு அணை திட்டம் திடீரென துரிதப்படுத்தப்படுவதற்கு என்ன காரணம்? இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுகிறதே?

நிச்சயமாக இல்லை. மேகேதாட்டு கூட்டுக் குடிநீர் திட்டம் பல வருடங்களாக திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்துக்கு உள்ளூர் வாசிகளும், கர்நாடக வனத்துறை அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களே? மேகேதாட் டுவில் அணை கட்டினால் 6,000 யானைகளின் வாழ்விடம் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்களே?

இது உறுதியான தகவல் இல்லை. மேகேதாட்டு அணை கட்டப்படும் இடத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப் பட்டுள்ளது. அந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகே இதுகுறித்த உண்மை தெரியும். அதுவரை ஊகத்தின் பேரில் வரும் செய்திகளை கருத்தில் கொள்ளத் தேவையில்லை.

இந்த நிதியாண்டின் பட்ஜெட்டில் மேகேதாட்டு அணைக்காக ரூ.25 கோடி ஒதுக்கியுள்ள கர்நாடக அரசு, இன்னும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்காமல் இருப்பது ஏன்?

இப்போதுள்ள நிலையில் அதற்கான அவசியம் இல்லை. மேகேதாட்டு அணை கட்ட தேவையான அனைத்து அம்சங் களையும் ஆய்வு செய்வதற்கும், திட்ட அறிக்கை தயாரிப்பதற்கும் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்க உள்ளோம்.

மேகேதாட்டு பகுதியில் எத்தனை அணைகள் கட்ட திட்டமிடப் பட்டுள்ளது? அவை உபரி நீரை தடுப்பதற்காக கட்டப்படும் தடுப் பணைகளா?

பெங்களூரூவில் நாளுக்கு நாள் மக்கள்தொகை பெருகிவரும் நிலையில், குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே இந்த அணை முதலில் திட்டமிடப்பட்டது. தற்போது பழைய மைசூரு, ராம்நகர், ஊரக பெங்களூரு ஆகிய பகுதிகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும் மழைக்காலத்தில் உபரி நீர் வீணாவதைத் தடுக்கவுமே இந்த அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் ஆய்வுக்குழுவின் அறிக்கைக்கு பிறகே மேகேதாட்டு திட்டம் இறுதி வடிவம் பெறும்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் ஒற்றுமை, மேகேதாட்டு விவகாரத்தில் இல்லையே? இது தொடர்பாக பிரதமருடனான சந்திப்பின்போது பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வரவில்லையே?

இது முற்றிலும் தவறான செய்தி. மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கிடையே ஒற்றுமை உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் லாபம் கருதி தமிழக தலைவர்கள் பிரதமரை சந்தித்தனர். அதை எதிர்கொள்ளும் நோக்கத்தில்தான் நாங்களும் பிரதமரை சந்தித்தோம். மற்றபடி, அணை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்குப் பிறகு எங்கள் செயல்பாட்டைப் பாருங்கள்.

மழை பொய்த்துப் போகும் காலங் களில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 192 டிஎம்சி நீரை கர்நாடக அரசு தர மறுப்பது ஏன்?

கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரை திறந்து விட்டு வருகிறோம். இடையில் ஒரு வருடம் மழை பொய்த்ததால் கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவியது. இதனால் எங்களுக்கு தேவையான நீரே கிடைக்கவில்லை. மழை இல்லை என்றால் எப்படி நீரை திறந்துவிட முடியும்.

இந்த விவகாரத்தில் நியாயம் இருப்பின் அதை தமிழக அரசியல் கட்சிகளிடம் எடுத்துக் கூறி பிரச்சினையை தீர்க்க முயற் சிக்கலாமே?

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மேகேதாட்டு அணை கட்ட முடிவு செய்துள்ளோம் என்பதை தமிழக அரசியல் கட்சிகளுக்கு புரிய வைக்க விரும்புகிறோம். இந்த விஷயத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி எங்களுக்கு உதவ முன்வந்தால் அனைத்து அரசியல் கட்சியினருடனும் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in