மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் மாற்று முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்

மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் மாற்று முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் மாப்பிள்ளை மதுப்பழக்கம் உள்ளவர் என அறிந்ததும் அவரை மணக்க மறுத்த மணப்பெண் அவரிடம் திருமண செலவு ரூபாய் 3.30 லட்சம் வசூல் செய்தார்.

அத்துடன், அத்திருமணத்துக்கு வந்திருந்த வேறு ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். திரைப்படப் பாணியில் நடந்த இந்தச் சம்பவம் நடந்தது.

உ.பி.யின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜோன்பூரின் திரிலோச்சன் மஹாதேவ் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது சொந்த பந்தங்களுடன் வாரணாசியில் கப்சேத்தியில் உள்ள மாதிஹியா எனும் கிராமத்து பெண்ணுடன் மணம் புரிய கடந்த ஞாயிறு இரவு வந்தார்.

அப்போது மணவறையில் நடந்த சடங்குகளில் ஒன்றான துவாரக பூஜையின் போது மணமகன் ராஜ்குமார் மது போதையில் இருந்தது மணமகள் தீபாவுக்கு தெரிய வந்தது.

இதனால், கோபம் கொண்ட தீபா, ராஜ்குமாரை மணம் புரிய மறுத்து விட்டார். தீபாவின் முடிவுக்கு அவரது தந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரும் ஆதரவளிக்க, திருமணம் நின்று போனது.

இதற்காக, மணமகன் ராஜ்குமாரின் தந்தையான தஸரத் பிரசாத் தீபாவையும் அவரது குடும்பத்தினரையும் சமாதானம் செய்ய முயன்றும் முடியாமல் போனது. மாறாக, மணமகன் ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை தீபாவின் உறவினர்கள் ஒருநாள் முழுக்க பணயமாக பிடித்து வைத்தனர்.

அவர்களிடம், தீபாவுக்காக அளிக்கப்பட்ட வரதட்சிணை பணம் மற்றும் திருமணத்துக்காக செய்யப்பட்ட செலவுத் தொகையையும் திருப்பி தரும்படி கேட்டனர். இந்தப் பிரச்சனையில் அப்பகுதியில் காவல்துறையும் தலையிட்டும் முடியாமல் போக, அவர்கள் முன்னிலையில் இருதரப்பினரும் மறுநாள் அமர்ந்து பஞ்சாயத்து பேசினர்.

அதில், வேறு வழியின்றி ராஜ்குமார் குடும்பத்தினருக்கு வரதட்சணையுடன் சேர்த்து செலவுத் தொகை ரூபாய் 3.30 லட்சம் அதே இடத்தில் திருப்பி அளிக்க வேண்டி வந்தது.

இந்நிலையில், விருந்தினராக ஜோன்பூரில் இருந்து வந்த ராஜ்குமாரின் உறவினரான பிரதீப் குமார் என்பவருடன் அதே மணவறையில் பேச்சுவார்த்தை நடத்தி சுபமான முறையில் தீபாவுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in