

தலைமைச் செயலாளர் நியமன விவகாரத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையிலான மோதல் முற்றுகிறது.
டெல்லியின் தலைமைச் செயலாளராக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சகுந்தலா டோலே காம்ளின் என்பவரை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நியமனம் செய்தார். இதனை ஆளும் ஆம் ஆத்மி அரசு ஏற்க மறுத்துள்ளது.
புதிய தலைமைச் செயலாளர் சகுந்தலா, ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக செயல்படுபவர் என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
மேலும் ஆம் ஆத்மி கட்சியினர் தலைமைச் செயலாளர் சுகுந்தாவின் நியமன உத்தரவைப் பிறப்பித்த முதன்மைச் செயலாளர் அனிந்தோ மஜும்தாரின் அலுவலகத்தை பூட்டினர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. ஆம் ஆத்மியின் செயல்பாட்டுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிருபர்களிடம் நேற்றுமுன்தினம் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு, ஆம் ஆத்மி கட்சியினர் சட்டத்தை மீறி வருகின்றனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் முதல்வர் கேஜ்ரிவாலின் தனிச் செயலாளராகப் பணியாற்றும் ராஜேந்திர குமார் என்பரை டெல்லி அரசு நேற்று முதன்மைச் செயலாளராக நியமித்தது. இந்த நியமனத்தை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நிராகரித்துள்ளார்.
இதனிடையே தலைமைச் செயலாளர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று பிற்பகல் பிரணாப் முகர்ஜியை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.