

ஜோத்பூரில் குழந்தைத் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் இளம் பெண்ணுக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக பஞ்சாயத்து தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தாதேவி மேக்வால். இவர் 11 மாத குழந்தையாக இருந்த போதே வளர்ந்த பின்னர் இந்தப் பெண்ணை இன்னாருக்குத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆனால், சந்தாதேவி தான் பச்சிளம் குழந்தையாக போடப்பட்ட திருமண ஒப்பந்தத்தை ஏற்பதற்கில்லை. எனவே அதை ரத்து செய்கிறேன் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார் சந்தா தேவிக்கு பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர்.
மேலும், கிராம பஞ்சாயத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரை விசாரித்த பஞ்சாயத்தார், சந்தாதேவிக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும், அவரது குடும்பத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து சந்தாதேவிக்கு உதவி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் கூறும்போது, "விவரம் அறியா பருவத்தில் போடப்பட்ட திருமண ஒப்பந்தம் செல்லாது எனக் கூறியதால் இந்த கடும் நடவடிக்கையை மணமகன் வீட்டார் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை சட்டப்பூர்வமாக அணுகவுள்ளோம்" என்றார்.