

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த புதிய பார்முலாவை வகுத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, "நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த (debate, discuss and decide) விவாதம், ஆலோசனை, முடிவு என்ற 3-டி பார்முலாவை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறேன்" என்றார்.
கடந்த ஆட்சியில், 2ஜி உள்ளிட்ட விவகாரங்களால் மக்களவை முடங்கியதை சுட்டிக் காட்டிய வெங்கய்யா நாயுடு, "மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற வேண்டும் என விரும்புகின்றனர். அது நிச்சயம் நிறைவேற்றப்படும்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்தை அளிக்கும் அதிகாரம் மக்களவை சபாநாயகருக்கு இருக்கிறது.
மக்களவையில் எதிர்கட்சியாக இருக்கு 55 உறுப்பினர்கள் பெற்றிருக்க வேண்டிய நிலையில், காங்கிரஸ் கட்சி 44 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் இறுதி முடிவை எடுப்பார்" என்றார்.
மேலும், மக்களவை இடைக்கால சபாநாயகராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் பதவி வகிப்பார் என்றும், இதற்கான பரிந்துரை கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.