சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் பாதித்த பகுதிகளை பார்வையிடும் மோடிக்கு பலத்த பாதுகாப்பு

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் பாதித்த பகுதிகளை பார்வையிடும் மோடிக்கு பலத்த பாதுகாப்பு
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தாண்டேவாடா மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை செல்கிறார்.

சமூக-பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் அப்பகுதியில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை நேரில் காண நாளை பிரதமர் மோடி தாண்டேவாடா செல்கிறார்.

இரண்டு மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ரவ்கட் - ஜக்தால்பூர் ரயில்வே பாதையின் 2-ம் கட்டப் பணிகள் மோடியின் வருகையின் போது தொடங்கி வைக்கப்படுகிறது.

நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த சிறுவர்களுக்கான கல்வி நகரம் ஒன்று உருவக்கப்பட்டுள்ளது. இங்கு பிரதமர் மோடி வருகை தந்து அங்கு மாணவர்களுடன் உரையாடுகிறார்.

இந்தக் கல்வி நகரம் சுமார் 100 ஏக்கர்கள் நிலப்பரப்பில் ரூ.120 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 5,000 நலிவடைந்த குழந்தைகளுக்கு இங்கு தரமான கல்வி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே போல் தாண்டேவாடா இளைஞர்கள் உரிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள இயங்கி வரும் வாழ்வாதாரக் கல்லூரிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

நக்ஸல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் தாண்டேவாட மாவட்டத்தில் இரும்பு தாது வளம் அதிகம். இங்கு உள்ள தில்மிலி கிராமத்தில் ஆண்டுக்கு 30 லட்சம் டன்கள் ஸ்டீல் உற்பத்தித் திறன் கொண்ட மிகப்பெரிய ஸ்டீல் தொழிற்சாலையை உருவாக்க மோடியின் நாளைய வருகையின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் ரூ.18,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரவ்கட்-ஜக்தால்பூர் இடையே 140 கிமீ தூரத்துக்கான ரயில் பாதை ரூ.24,000 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது.

இந்த இரண்டு திட்டங்களும் தாண்டேவாடா பகுதியில் சமூக- பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்று அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதற்கிடையே பிரதமர் வருகையையொட்டி இரண்டடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில ஆயுதப்படைகள் தவிர துணை ராணுவப்படையினர் ஆகியோரும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புபணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in