

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரது சாட்சியம் நேற்று பதிவு செய்யப்பட்டது. கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காத ஷாகித் பல்வாவுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் சாட்சியம் பதிவு செய்வது தொடங்கியுள்ளது. மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சாட்சியம் பதிவு முடிந்ததை அடுத்து, வியாழக்கிழமை திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் இருவரும் நீதிமன்றம் எழுப்பிய 1,718 கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலை, “பென் டிரைவ்" வழியாக தாக்கல் செய்தனர்.
கடந்த புதனன்று ஸ்வான் டெலிகாம் நிர்வாகி ஷாகித் பல்வா சாட்சியம் அளித்தபோது, பல கேள்விகளுக்கு, “கேள்வி புரியவில்லை; பதிலளிக்க விரும்பவில்லை" போன்ற வாசகங்களில் பதிலளித்திருந்தார். இதைப் படித்த நீதிபதி ஓ.பி.ஷைனி கடும் கண்டனம் தெரிவித்தார். “இப்படி பதிலளிப்பது ஒரு மோசடி. நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்கிறீர்களா?” என்றார். இதையடுத்து ஷாகித் பல்வா தரப்பில் வியாழனன்று மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் முறையாக பதிலளிப்பதாக உறுதி அளித்தனர்.
இதனால், குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் ஆசிஃப் பல்வா, பாலிவுட் தயாரிப் பாளர் கரீம் மொரானி ஆகியோர் வியாழனன்று அளிக்கவிருந்த சாட்சியம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.