

சில நாட்களுக்கு முன்பு விவசாயத்தை மையப்படுத்தி தொடங்கப்பட்ட டிடி கிசான் சேனலின் விளம்பரத் தூதராக பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "டிடி கிசான் சேனலின் விளம்பரத் தூதராக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டிருப்பது உண்மைதான். இது தொடர்பாக அவரிடம் உரையாடிய போது மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்டார். எனினும், அவர் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்" என்றார்.
இந்த சேனல் குறித்து தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும் உருவாக்கப்படும் விளம்பரங்களில் அமிதாப் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2010-ல் உ.பி.யின் முசாபர்நகர் மாவட்டம் ககோரியில் அமிதாப் ரூ.3.03 கோடிக்கு நிலம் வாங்கிய போது அவரை விவசாயியாக அம்மாநில அரசு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது