Last Updated : 12 May, 2015 09:59 AM

 

Published : 12 May 2015 09:59 AM
Last Updated : 12 May 2015 09:59 AM

நிலம் கையகப்படுத்தும் மசோதா மக்களவையில் அறிமுகம்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும், அதற்கு நிலம் வேண்டும் என்று கூறி நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த மசோதாவை அவசரச் சட்டமாக மத்திய அரசு பிரகடனம் செய்தது. அந்தச் சட்டம் மக்களவையில் நிறைவேறினாலும், மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இதையடுத்து அவசரச் சட்டம் காலாவதியானது.

இதையடுத்து, 2-வது முறையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதற்கான மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என்று எதிர்க்கட்சியினர் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும், நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலம் கையகப்படுத்தும் மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளபோது, மக்களவையில் எப்படி தாக்கல் செய்யலாம் என்று கேள்வி எழுப்பினர். கூச்சல் குழப்பங்களுக்கு இடையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “இந்த மசோதாவை அரசு இன்றே நிறைவேற்றிவிடப் போவதில்லை. மசோதாவை அரசு அறிமுகம் மட்டும்தான் செய்கிறது. இந்த மசோதா விவசாயிகளுக்கு ஆதரவானது” என்றார்.

அப்போது எதிர்க்கட்சியினர் கடும் ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டனர். மேலும், மத்திய அரசைக் கண்டித்து பதாகைகளைத் தாங்கி கோஷமிட்டனர். அதை கண்டித்து அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சியினர் விமர்சனங்களில் ஈடுபடுவது தொடர்ந்தால், அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. எதிர்க்கட்சிகளின் செயல் சரியல்ல. அவைக்கு உள்ளேயே பதாகைகளைத் தாங்கி கோஷமிடுவதை மக்களவைத் தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

எதிர்க்கட்சியினரை சமாதானப்படுத்தும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் முயற்சி தோல்வி அடைந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் மத்திய அரசு சேவை செய்கிறது. இந்த மசோதா விவசாயிகளின் நலனுக்கானது அல்ல. மக்களவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, மசோதாவை அவையில் அறிமுகம் செய்ய அவர் அனுமதிக்கக் கூடாது” என்றார்.

எனினும், மசோதாவை அவையில் தாக்கல் செய்வதற்கு உறுப்பினர்கள் மத்தியில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என மக்களவைத் தலைவர் அறிவித்தார். ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்பு, மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து உறுப்பினர்களின் ஓட்டெடுப்பு நடந்த பின், ‘சரியான நஷ்ட ஈடு உரிமை மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறு குடியமர்வு திருத்த மசோதா 2015’ என்ற பெயரிலான இந்த மசோதா அவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை கிராமப்புற விவகாரத் துறை அமைச்சர் வீரேந்திர சிங் தாக்கல் செய்தார். இதனால் பரபரப்பு நிலவியது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x