

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிராந்திய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை ஏற்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் மத்திய குழு முடிவு செய்யும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: “இடதுசாரிகளுடனும், மதச்சார் பற்ற கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். அதுபோன்று இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு, மக்களவைத் தேர்த லுக்கு பிறகு ஏற்படும் என நினைக்கிறேன்.
ஊழல், சமத்துவமின்மை ஆகிய பிரச்சினைகளை ஆம் ஆத்மி கட்சி எழுப்பி வருவது பாராட்டுதற்குரியது. புதிய தாராளமயக் கொள்கைகள், ஊழல் அதிகரிக்க காரணமாக உள்ளன. தாராளமயக் கொள்கைகள் குறித்தும், மதவாதம் குறித்தும் தங்களின் நிலைப்பாட்டை ஆம் ஆத்மி கட்சி அறிவிக்க வேண்டும்.
ஊழலை ஒழிக்க கடுமையான சட்டங்கள் தேவை. லோக்பாலை அமைத்ததுடன் ஊழலுக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்ததாகக் கருதக் கூடாது. நாட்டின் வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை யடிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கும் சட்டங்களை திருத்திய மைக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டும்.
ரூ. 5 லட்சம் கோடி இழப்பு
கார்ப்பரேட் மற்றும் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் காரணமாக நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் ரூ. 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக கட்டமைப்புகளில் அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன்மூலம் உற்பத்தி பெருகும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். நவீன இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுதான். அதன் மூலம் ரூ. 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வளவு பணத்தை வைப்பதற்கு எவ்வளவு பெரிய இடம் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு பாருங்கள்.
புதிய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதில் காங்கிரஸும் பாஜகவும் உறுதியாக உள்ளன.
இந்த இரு கட்சிகளும் கடைப்பிடிக்கும் கொள்கைகள் தான் இதுபோன்ற ஊழல் நிகழக் காரணமாக உள்ளது. அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் முறையை பரவலாகக் கொண்டு வந்தது மார்க்சிஸ்ட் கட்சிதான்” என்றார் யெச்சூரி.
பிராந்திய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடிய சூழ்நிலை வந்தால், அதை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்குமா என்று கேட்டபோது, “அது தொடர்பாக கட்சியின் மத்திய குழுதான் முடிவு செய்யும்” என்றார்.