Last Updated : 03 May, 2015 10:43 AM

 

Published : 03 May 2015 10:43 AM
Last Updated : 03 May 2015 10:43 AM

கான்களும்.. இந்தியக் காதலும்…

யாரும் தூண்டிவிடாத வரையிலும், தவறாக வழிகாட்டாத வரையிலும் இந்தியர்கள் மதச்சார்பின்மை உடையவர்கள்தான். இதுதான் இந்திய திரையுலகில் “கான்”களின் (ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான்) மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இது “ஆடியோமேட்டிக் டாட் இன்” இணையதளத்தில் என்னிடம் ஒரு பெண் எழுப்பிய கேள்வி. இது எனக்குள்ளும் அடிக்கடி தோன்றும் கேள்விதான். நேரடியாக சொல்லப்போனால், இதுதான் காரணம் என்று எளிதில் பதில் கூறிவிட முடியாத கேள்வியும் கூட.

பாகிஸ்தானில் சென்றாலும் இதேபோன்ற கேள்வி சில மாறுதல்களுடன் எழும். முக்கியமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முதல்வராக இருந்தவரும், பத்திரிகை ஆசிரியர், கிரிக்கெட் நிர்வாகி, அரசியல்வாதி என பன்முகங்களைக் கொண்ட வருமான நஜம் சேத்தி ஒரு முறை பாலிவுட் திரையுலக காதல்கள் குறித்து ஆழமாக யோசித்துப் பேசினார். முக்கியமாக இந்து – முஸ்லிம் காதல் கதைகள் அவரது பேச்சில் இடம் பெற்றன. இந்து – முஸ்லிம் காதல் என்றால் இந்திய திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பம்பாய் திரைப்படம் நினைவுக்கு வரும்.

இந்து இளைஞர் முஸ்லிம் பெண்ணை காதலித்து கரம் பிடிப்பதும் அதன் பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுமே அந்த கதை என்பது நாம் அனைவரும் அறிந்தது. இதை சுட்டிக் காட்டிய சேத்தி, இந்தியாவில் இந்து இளைஞர், முஸ்லிம் பெண்ணை காதலித்து மணப்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் முஸ்லிம் இளைஞர் இந்து பெண்ணை காதலிப்பது ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லைதானே? என்று கேள்வி எழுப்பினார்.

நிஜ வாழ்க்கையில்...

அவர் கூறுவது சரியில்லை என்பதுதான் இதற்கு எனது பதிலாக இருந்தது. பாலிவுட் இயக்குநர்களும், கதாசிரியர்களும் வேண்டுமானால் அப்படி சிந்தித்து கதை எழுதியிருக்கலாம். ஆனால் இந்தியாவில் திரைப்படங்களை ஓரம்கட்டிவிட்டு நிஜ வாழ்க்கையில் காணக்கூடிய காதல்களை நாம் பார்க்க வேண்டும். முக்கியமாக இந்திய திரையிலகில் முன்னணியில் உள்ள ஷாருக் கான், ஆமிர் கான் ஆகியோர் இந்து பெண்களை திருமணம் செய்திருக்கிறார்கள். சல்மான் கான் கூட இந்து பெண்ணை காதலித்துள்ளார்.

சமீபத்தில் சயீப் அலி கானும் கரீனா கபூரை திருமணம் செய்து இந்த பட்டியலில் இணைந்துள்ளார். முஸ்லிம் நடிகர் இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதால் அவர்களது ரசிகர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அவர்கள் அதனை மனமார ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே இந்து பெண்ணை, முஸ்லிம் இளைஞர் காதலிப்பது போன்ற கதை ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்க்காது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

நமது திரையுலகில் முக்கியமாக ஹிந்தி திரையுலகில், பெரிய பட்ஜெட் படங்களில் கூட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அந்த கதாபாத்திரமாகவே பார்க்கப்படுவதுதான் வழக்கமாக உள்ளது. சல்மான் ஒரு படத்தில் எந்த கேரக்டரில் நடிக்கிறாரோ அதுதான் அவரது நிஜ முகம் என்ற நினைப்புதான் அனைவரது மனதில் ஆளுமை செலுத்துகிறது. ரசிகர்கள் அந்த நடிகரை ஒரு கதாபாத்திரம் என்று பார்க்காமல், அந்த குணாதிசியம் உடைய நடிகராகவே பார்க்கின்றனர்.

எனவே அந்த நடிகரை அந்த பார்வையுடன் அப்படியே ரசிக் கிறார்கள். எனவே ஒரு நடிகர் முஸ்லிம் கதாபாத்திரத்தில் இந்து பெண்ணை காதலிப்பதையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள்.

பாலிவுட் உலக வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால் மேலும் சில சுவாரசிய சம்பவங்களை அறிய முடியும். நடிகர் திலிப் குமார் தனது முஸ்லிம் பெயரை பயன்படுத்தாமல் இந்து பெயரிலேயே நடித்துள்ளார். அதுவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற பல முஸ்லிம் நடிகர்களை உதாரண மாக கூற முடியும்.

இந்து – முஸ்லிம் விவகாரத்தில் பாலிவுட் திரையுலகம் என்பது ஒரு சிறிய உதாரணம்தான். ஆனாலும் மிகச் சிறந்த உதாரணம். இந்தியாவில் இந்த இரு பெரும் மதங்களுக்கு இடையிலான பிணைப்பு உள்ளது. இந்தியாவில் மதப் பிரச் சினைகள் என்பதற்கு இதுவரை நடைபெற்ற பெரிய மத வன் முறைகளை உதாரணமாக கூற முடியும். இந்த மோதல்களும், வன்முறைகளும் சில இடங்களில் கிளை விட்டு பல ஆண்டுகளாக தொடர்கின்றன.

இந்தியாவின் இயல்பு

எனினும் இந்தியாவில் பல விஷயங்கள் மத நோக்கத்தில் பார்க்கப்படாமல், தனி மனிதரின் பார்வையில் பரந்த நோக்கிலேயே ஆராயப்படுகிறது என்பது உண்மை. நிச்சயமாகவே மதச்சார்பின்மை என்பது மிகவும் சிக்கலான வார்த்தை. அதை யார் எப்படி பயன் படுத்துவதால் அதன் அர்த்தம் எப்படியெல்லாம் மாறும் என்பது எனக்குத் தெரியாது. எனினும் எனது பார்வையில் இந்தியாவில் அனைத்து நம்பிக்கைகளுக்கும் இடமுள்ளது. சகிப்புத்தன்மை உள்ளது. இங்கு சகிப்புத்தன்மை என்பது இயல்பான சுபாவம். இது இந்துப் பாரம்பரியத்தில் இருந்து வந்தது என்று யாரும் வாதிடலாம். வேறு எப்படி வேண்டுமானாலும் விளக்கம் கூறலாம்.

எனினும் யாரும் தூண்டிவிடாத வரையிலும், தவறாக வழி காட்டாத வரையிலும், நாம் அடிப்படை யில் சகிப்புத்தன்மையும் மதச்சார் பின்மையும் உடையவர்கள். என்னிடம் கேள்வி எழுப்பியவரிடம் இந்த விஷயத்தில் நான் உடன்படுகிறேன். அடிப்படையில் நாம் சகிப்புத்தன்மை உடையவர்கள் என்பதே எனக்கு போதுமான மகிழ்ச்சி அளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x