Published : 22 May 2014 10:27 AM
Last Updated : 22 May 2014 10:27 AM

மாநில கட்சிகள் மக்களவையில் இணைய வாய்ப்பு

காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்தி, பிரதான எதிர்கட்சி என்ற அந்தஸ்தை அக்கட்சிக்கு மறுக்கும் முனைப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பிஜூ ஜனதா தளமும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.

மக்களவையில் ஒன்றிணைந்து செயல்படுவது எப்படி என்ற சாத்தியக்கூறுகளை இக்கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன.

தமிழகத்தில் அதிமுக: 37, மேற்கு வங்கத்தில் திரிணமூல்: 34, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம்: 20 என பலம் பொருந்திய 91 இடங்களையும், ஒருங்கிணைப்பதை, மக்களவையில் ஒருமித்த கருத்துடைய ஒரு கூட்டணியாக உருபெற்று காங்கிரஸ் கட்சியைவிட ஒரு பலம்வாய்ந்த தோற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பாக இக்கட்சிகள் கருதுகின்றன. எனவே, இது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

மக்களவை எதிர்கட்சித் தலைவர், துணை சபாநாயகர், பொதுக் கணக்கு குழு தலைவர் ஆகிய பதவிகளை எப்படி வசப்படுத்துவது என்ற புரிதலை ஏற்படுத்த முயற்சியில் திரிணமூல் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது. இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதிமுக-வை அணுகியுள்ளதாக சென்னையில் ஆளும்கட்சிக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே அதிமுக - பிஜூ ஜனதா தள கட்சிகள் இது தொடர்பான ஆலோசனையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் முதல்வர் நவீன் பட்நாயக் இல்லத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறும் பிஜூ ஜனதா தள கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் அதிமுகவுடன் ஒருங்கிணைவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இது குறித்து பிஜூ ஜனதா தள எம்.பி. பைஜெயந்த் பாண்டா கூறுகையில்: "நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ சிந்தனையுடன் பணியாற்றுவோம் என முதல்வர் ஏற்கெனவே கூறியிருக்கிறார்" என்றார்.

இதே போல் தேர்தல் பிரச்சாரத்தின் போதே, காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி வந்தார். ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சென்னை வந்த போது ஜெயலலிதா பேசுகையில், நவீன் எனது சகோதரர் என பெருமிதத்தோடு கூறியிருந்தார்.

சூழ்நிலைகள், இந்த மூன்று கட்சிகளும் ஒருங்கிணைந்து மக்களவையில் ஒரு சக்தியாக உருவெடுக்க முனைப்புடன் இருப்பதையே உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x