

தாஜ்மஹால், புத்த கயா உட்பட நாடு முழுவதும் சுற்றுலாத் தலங் களில் விரைவில் கம்பியில்லா இணையதள சேவையான வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று தொடங்கி வைத்தார். இதில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்றார். அவர் கூறியதாவது:
வாரணாசி படித்துறைகளில் ஏற்கெனவே வை-பை வசதி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், புத்த கயா உட்பட நாடு முழுவதும் முக்கிய சுற்றுலா தலங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும்.
இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களிலும் பிபிஓ மையங் களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் முதல்கட்டமாக 48 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இணையதள வணிகத் திட்டத் தில் அஞ்சல் துறை வெற்றிகரமாகச் செயல்படும். தற்போது நாடு முழுவதும் 100 கோடி செல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் 30 கோடி முதல் 50 கோடி செல்போன் சந்தாதாரர் கள் செல்போனில் இணைய வசதியைப் பெறுவார்கள்.
மேலும் 2.5 லட்சம் கிராமங் களில் பிராட்பேண்ட் வசதியை ஏற்படுத்தவும் திட்ட மிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.