

அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இனத்தவர்கள் கடந்த ஒருவாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால் மேற்கு ரயில்வேக்கு தினமும் ரூ. 15 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.
இதுதொடர்பாக மேற்கு ரயில்வே வர்த்தகப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது, “சரக்கு ரயில் உட்பட தினமும் 15 முதல் 20 ரயில்கள் வரை ரத்து செய்யப்படுவதால், தினமும் ரூ. 12- 15 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பயணிகள் ரயில் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால், துரதிருஷ்டவசமாக சரக்கு ரயில் சேவையும் பாதிக்கப்பட்டிருப்பது கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது” என்றார்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் இன மக்கள் பரத்பூர் மாவட்டத்தில் ரயில்பாதைகளை மறித்து, சேவையை முடக்கியுள்ளனர்.
ஆகஸ்ட் கிராந்தி ராஜ்தானி விரைவுரயில், கோல்டன் டெம்பிள் மெயில், மும்பை சென்ட்ரல்-புது டெல்லி துரந்தோ விரைவு ரயில், மும்பை சென்ட்ரல்- ஃபிரோ,்புர் ஜனதா விரைவு ரயில் உட்பட ஏராளமான ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப் படுகின்றன. மேற்கு ரயில்வே தலைமை செய்தித்தொடர்பாளர் சரத் சந்திரயான் கூறும்போது, “ராஜ்தானி விரைவு ரயில், பாஸ்சிம் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களை மாற்றுப்பாதையில் சுமூகமாக இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவை தற்போது சேருமிடத்தை 8 முதல் 10 மணி நேரம் வரை தாமதமாக சென்றடைகின்றன. பயணிகளின் வசதிக்காக ஹெல்ப்லைன்கள் நிறுவப்பட்டுள்ளன. கட்டணத்தைத் திருப்பித் தருவதற்காக சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பெரிய ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன” என்றார்.
ரயில்பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜிவ் சிங்கால் கூறும்போது, “அரசியல் திடம் இல்லாததால் குஜ்ஜார் இன மக்களை அடிபணிய வைக்க அரசுக்கு விருப்பமில்லை. இப்பிரச்சினைக்கு நீதிமன்றம்தான் தீர்வு காண முடியும்” என்றார்.