

மத்திய அமைச்சரவை செயலராக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஐஎஎஸ் அதிகாரி பிரதீப் குமார் சின்ஹா நேற்று நியமிக்கப் பட்டுள்ளார்.
இப்போது 59 வயதாகும் சின்ஹா, 1977-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஐஎஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார். இப்போது மத்திய மின்துறை அமைச்சகத்தில் செயலராக பணியாற்றி வருகிறார். ஜூன் 13-ம் தேதி அவர் மத்திய அமைச்சரவை செயலராக பொறுப்பேற்க உள்ளார்.
இதற்கு முன்பு மத்திய கப்பல் துறை அமைச்சக செயலர் உட்பட பல்வேறு மத்திய அரசுப் பணிகளிலும், உத்தரப் பிரதேச மாநில அரசிலும் பணியாற்றியுள்ளார். இப்போதைய மத்திய அமைச்சரவை செயலர் அஜித் சேத்தை அடுத்து சின்ஹா இப்பதவியை ஏற்க இருக்கிறார்.
அஜித் சேத் கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவை செயலர் பதவியில் இருந்தார். வெளி அலுவல் பணி சிறப்பு அதிகாரியாக மத்திய அமைச்சரவை செயலர் பொறுப்பை ஏற்குமாறு சின்ஹாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் ஜூன் 13-ம் தேதி முறைப்படி பொறுப்பை ஏற்க இருக்கிறார். இதற்கு பிரதமர் மோடி நேற்று ஒப்புதல் அளித்தார்.