

ஆந்திர மாநில பிரிவினை விஷயத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி போட்ட கணக்கு தவறாகிவிட்டதாக அக்கட்சி வட்டாரத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆந்திரத்தில் தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்த காங்கிரஸ், மூன்றாவது முறையும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாதென்பதால், தனி தெலங்கானா மாநிலம் வழங்க முடிவெடுத்தது.
அதன்படி, தெலங்கானா மாநிலம் வழங்குவதன் மூலம், சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விடலாம் என எண்ணியது. இதற்கான வாய்மொழி ஒப்பந்தமும் செய்து கொண்டது. ஆனால், தெலங்கானா மாநிலம் வழங்கிய பின்னர், சந்திர சேகரராவ் காங்கிரஸுடன் இணைய மறுத்து விட்டார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.
பின்னர் வேறு வழியின்றி தெலங்கானாவில் தனித்து தேர்தலை சந்தித்தது. இதனால் பிரிக்கப்பட்ட மாநிலத்தில், ஒரு பகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டுவிட்டது.
ஆந்திர மாநிலத்தை பிரித்து, ஒரு மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று சோனியா காந்தி போட்ட கணக்கு தவறிவிட்டதாக தெலங்கானாவில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியினர் விரக்தியுடன் கருத்துத் தெரிவித் துள்ளனர்.