

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலிஷா கிலானிக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு அம்மாநில பாஜக ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு மத்திய அரசிடம் கூறுவோம் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சித் தலைவர் மெஹ்பூபா முப்தி கூறும்போது, “இந்த விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகவேண்டும். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நாங்கள் பேசுவோம்” என்றார்.
கிலானி, சவூதி அரேபியாவில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது மகளை சென்று பார்ப்பதற்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்தார். தேசிய கண்ணோட்டம் கொண்ட தலைவர்கள் பலரும், மத்திய அரசு இதை ஏற்கவேண்டும் என கூறியிருந்தனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பிடிபியுடன் இணைந்து ஆட்சி செய்யும் பாஜக இதற்கு ஆட்சேபம் தெரிவித்தது. “கிலானி தனது தேசவிரோத செயல்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வேண்டுமானால் தான் இந்தியன் என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று அக்கட்சி கூறியது.
பாஜகவின் ஆட்சேபம் குறித்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். “கிலானிக்கு 2011-ம் ஆண்டு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, அதை அவர் ஏற்க மறுத்தார். 2011-ல் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க முடியும் எனில் 2015-ல் ஏன் வழங்க முடியாது? இது ஏன் பிரச்சினையாக மாற்றப்படுகிறது? பாஜகவும் பிடிபியும் சொல்லி வைத்துக்கொண்டு நாடகம் ஆடுகின்றனவா?” என்று ஒமர் கேள்வி எழுப்பியுள்ளார்.