மரண தண்டனை கைதிகளை ரகசியமாக தூக்கிலிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மரண தண்டனை கைதிகளை ரகசியமாக தூக்கிலிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Updated on
1 min read

மரண தண்டனை கைதிகளுக்கு வாழ்வதற்கான அடிப்படை உரிமையை மறுக்க‌க் கூடாது. அவர்கள் தங்களுடைய குடும்பத்தினரை சந்திப்பதற்கு அனுமதி வழங்காமலும், தண்டனை நிறைவேற்றம் குறித்து முன்பே கைதிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும் கைதிகளை தூக்கிலிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

தங்களின் காதலுக்கு தனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த‌ ஷபனம் தன்னுடைய‌ காதலர் சலீம் உடன் சேர்ந்து, தன் குடும்பத்தினர் 7 பேரைக் கொன்றார்.

இந்தக் குற்றத்துக்காக உத்தரப் பிரதேச நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. மேல் முறையீட்டில் அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

மே 15-ம் தேதி உச்ச நீதிமன்றம் தண்டனை உறுதி செய்த ஒரு வாரத்திலேயே, உத்தரப் பிரதேச நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனைக்கான வாரண்ட்டை பிறப்பித்தது.

இந்த வழக்கை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் யு.யு.லலித் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, இவ்வளவு விரைவாக தூக்கு தண்டனை வாரண்ட் பிறப்பித்தது குறித்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அதனை ரத்து செய்தனர்.

பின்னர், `தூக்கு தண்டனையில் இருந்து வெளியே வர தனக்கு உள்ள அனைத்து வாய்ப்புகளையும் ஒரு குற்றவாளி பயன்படுத்தி முடிக்கும் வரை அவரைத் தூக்கிலிடுவது தவறாகும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கும், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் கருணை மனு அளிப்பதற்கும் போதிய கால அவகாசத்தை குற்றவாளிக்கு அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in