

நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டை விட்டே வெளியேறுவேன்' என விமர்சித்த, கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தியை நாட்டை விட்டு வெளியேறும்படி பா.ஜ.க.வினர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதால்,பெங்களூரில் உள்ள அவரது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
81 வயதான அனந்த மூர்த்தி பெங்களூரில் உள்ள டாலர்ஸ் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.ஞானபீட விருது பெற்ற எழுத்தாளரான இவர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஏராளமான புதினம், சிறுகதை, நாடகம், கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
முற்போக்கு கருத்துகளை எழுதி வரும் அனந்தமூர்த்தி, இந்திய அளவில் முக்கியமான அரசியல் விமர்சகராகவும் கருதப்படுகிறார்.
நாட்டை விட்டு வெளியேறு
''நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானால் நான் நாட்டை விட்டே வெளியேறுவேன்.குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்திய மோடி,காந்தி, நேரு உருவாக்கிய மதச்சார்பற்ற இந்தியாவை ரத்த பூமியாக்கி விடுவார்'' என சில மாதங்களுக்கு முன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அனந்த மூர்த்தியின் கருத்துக்கு அப்போதே கண்டனம் தெரிவித்த பா.ஜ.க. தலைவர்கள் ' அனந்தமூர்த்தி ஒரு நக்ஸலைட் தீவிரவாதி. அவரை நாட்டை விட்டே துரத்த வேண்டும்' என்றனர். இந்நிலையில் மோடி இந்தியாவின் பிரதமராக இருப்பதால் அனந்த மூர்த்தி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நமோ அமைப்பினர்(பா.ஜ.க.வில் ஒரு பிரிவு) கடந்த சனிக்கிழமை மிரட்டல் விடுத்தனர்.மேலும் அனந்தமூர்த்தி பாகிஸ்தான் செல்ல விமான டிக்கெட்டும் எடுத்து அனுப்பினர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இதனிடையே எழுத்தாளர் அனந்தமூர்த்திக்கு பல்வேறு மர்ம நபர்கள் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். 'மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறாவிட்டால், உன்னை உலகை விட்டே வெளியேற்றி விடுவோம்'என சமூக வலைத்தளத்தில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதனால் கடும் மன உளைச் சலுக்கு ஆளான அனந்தமூர்த்தி மாநகர காவல்துறை ஆணை யரிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு காவல்துறை ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய 10 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும் அனந்தமூர்த்திக்கு பா.ஜ.க.வினர் தொடர்ந்து தொலைபேசி,கடிதங்கள் மூலம் மிரட்டல் விடுப்பதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
மீண்டும் டிக்கெட்
மோடியை விமர்சித்த அனந்தமூர்த்திக்கு நமோ அமைப்பினர் கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு செல்ல விமான டிக்கெட் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் ஷிமோகாவில் இருந்து அனந்த மூர்த்தி பாகிஸ்தான் செல்ல விமான டிக்கெட்டும், மிரட்டல் கடிதமும் அனுப்பி உள்ளனர்.
அக்கடிதத்தில், 'நரேந்திர மோடி வருகிற 26-ம் தேதி நாட்டின் பிரதமராக பதவியேற் கிறார்.அன்றைய தினமே நீங்கள் (அனந்தமூர்த்தி) பாகிஸ்தான் செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு சென்று அங்கிருந்து கராச்சி செல்ல தேவையான டிக்கெட்டை இத்துடன் இணைத்துள்ளோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவகவுடாவிற்கும் எதிர்ப்பு
முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கும் பா.ஜ.க.வினர் மிரட்டல் விடுத்துள்ளனர். அவர் கடந்த மாதம்,'மோடி பிரதமரானால் அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று, கர்நாடகாவை விட்டே வெளியேறுவேன்''என கூறினார்.
இதையடுத்து, நமோ பிரிகேட் அமைப்பினை சேர்ந்த நரேஷ் ஷெனாய்,''நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் ஆகிவிட்டார்.எனவே அவருக்கு எதிராக கருத்து தெரிவித்த அனந்தமூர்த்தியும், தேவகவுடாவும் நாட்டை விட்டும், கர்நாடகாவை விட்டும் வெளியேற வேண்டும்.அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்த தேவகவுடா உடனடியாக ஓய்வு பெற வேண்டும்'' என்றார்.
சில மாதங்களுக்கு முன்பு 'மோடி பிரதமரானால் ட்விட்டரில் இருந்து மட்டுமல்ல இந்தியாவை விட்டே வெளியேறுவேன்' என கூறிய இந்தி நடிகர் கமால் ஆர்.கான் கடந்தவாரம் நாட்டை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர்கள் கண்டனம்
அனந்த மூர்த்திக்கு பா.ஜ.க. தொண்டர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதற்கு பல கன்னட எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மூத்த கன்னட எழுத்தாளர் மரளு சித்தப்பா, “இந்திய ஒரு சுதந்திர நாடு.யாரைப் பற்றி வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்க யூ.ஆர்.அனந்தமூர்த்தி உள்ளிட்டோருக்கு உரிமை இருக்கிறது.
உலகமே மதிக்கும் ஒரு எழுத்தாளருக்கு பா.ஜ.க.வினர் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுப் பதை எந்த பா.ஜ.க.தலைவரும் கண்டுக்கொள்ளாதது வருத்த மளிக்கிறது.பதவியேற்பதற்கு முன்பே இந்த கொடுமை யென்றால், அடுத்த 5 ஆண்டுகளும் என்ன நடக்கப்போகிறதோ?''என வேதனை தெரிவித்தார்.
கிரீஷ் கர்னாட், ‘‘அனந்தமூர்த் திக்கு பா.ஜ.க.வினர் மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது.மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னால், அதன் உண்மையான அர்த்தம் நாட்டை விட்டு வெளியேறுவதல்ல.மோடி மீதான கோபம் மட்டுமே என்றார்