

உயர் அதிகாரிகளை நியமிப்பதற்கு துணைநிலை ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது குறித்து விவாதிக்க டெல்லி சட்டப்பேரவையின் அவசரக் கூட்டத்துக்கு ஆம் ஆத்மி அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டத் துறை வல்லுநர்கள் கே.கே.வேணுகோபால் மற்றும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆகியோர் வழங்கிய ஆலோசனை குறித்து விவாதிக்கப் பட்டது.
மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கை குறித்து விவாதிக்க, வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. தேவை ஏற்பட்டால் இந்தக் கூட்டத்தை நீட்டிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பாக டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கு துணைநிலை ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், இதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசிக்கத் தேவையில்லை என்றும் கடந்த வியாழக்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.
இந்த அறிவிக்கை குறித்து கேஜ்ரிவால் கூறும்போது, “ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிக்கை, ஆம் ஆத்மி அரசின் ஊழல் ஒழிப்பு முயற்சியைக் கண்டு பாஜகவுக்கு நடுக்கம் ஏற்பட்டிருப்பதை உணர்த்துவதாக உள்ளது.