

சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்ட கிராம மக்கள் மீட்கப்படுவார்கள் என்று மாநில முதல்வர் ரமண் சிங், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து சத்தீஸ்கர் மாநிலம் டோங்பால் பகுதியில் சுமார் 500 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திச் சென்று சிறை வைத்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிராம மக்களை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். ஆனால் எண்ணிக்கையில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் 6 பேர் மட்டுமே கடத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். உள்ளூர் ஊடகங்கள் 1000 பேர் வரை சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
முதல்வர் உறுதி
இதுகுறித்து மாநில முதல்வர் ரமண் சிங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, சுமார் 300 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிறைபிடித்துச் சென்றுள்ளனர், அவர்களை மீட்க மூத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், மாவோயிஸ்ட் தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.
இந்தப் பிரச்சினை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் லக்னோவில் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், சிறைபிடிக்கப்பட்ட கிராம மக்களை மீட்க மத்திய அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.