கேரளாவில் 4-வது ஆண்டு ஆட்சியில் அடியெடுத்து வைத்தார் உம்மன் சாண்டி

கேரளாவில் 4-வது ஆண்டு ஆட்சியில் அடியெடுத்து வைத்தார் உம்மன் சாண்டி
Updated on
1 min read

கேரளாவில் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பல மாநிலங்களில் படுதோல்வி அடைந்த நிலையில், கேரளத்தில் மட்டும் முதலிடம் பெற்றது. இதனால், மகிழ்ச்சியடைந்துள்ள உம்மன் சாண்டி, வளர்ச்சி, மக்கள் நலம் ஆகிய குறிக்கோள்களுடன் தொடர்ந்து ஆட்சியை நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதி களையும், கம்யூனிஸ்ட் கூட்டணி 8 தொகுதிகளையும் வென்றன.

10-க்கும் குறைவான இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், முதல்வர் உம்மன் சாண்டியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். அவர் மீதான அதிருப்தி காரணமாக, கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிராக சில தலைவர்கள் காய் நகர்த்தி வந்தனர். இந்நிலையில் தேர்தலில் பெற்றுள்ள வெற்றியின் மூலம் கட்சியில் உம்மன் சாண்டியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸுக்கு எதிரான போக்கு காணப்பட்ட நிலையில், கேரளத்தில் மட்டும் அக்கட்சிக்கு சாதகமாக மக்கள் வாக்களித்துள்ளனர். இதற்கு உம்மன் சாண்டியின் ஆட்சிக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்புதான் காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 3 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்த உம்மன் சாண்டி, இப்போது 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “எனது தலைமையிலான அரசின் திட்டங்கள், கொள்கைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாக இத்தேர்தல் அமைந்துள்ளது. ‘மிஷன் 676’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை அடுத்த 2 ஆண்டுகளில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

உம்மன் சாண்டி, 2011-ம் ஆண்டு மே 18-ம் தேதி கேரள முதல்வராக பதவியேற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in