

ஆந்திராவில் ஆளும் கட்சியினரின் அரசியல் கொலைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில ஆளுநருக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேற்று காலையில் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுடன் சென்ற ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆந்திர மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 11 மாதங்களில் மட்டும் அனந்தபூர் மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கடந்த மாதம் 29-ம் தேதி, பூமிரெட்டி சிவபிரசாத் ரெட்டியை தாசில்தார் அலுவலக வளாகத்திலேயே மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பினர். இதே மாவட்டத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதி ஒற்றைச் சாளர தலைவர் பாஸ்கர் ரெட்டியையும் கொலை செய்தனர்.
இந்தக் கொலையில் ஆளும் கட்சியினருக்கு பங்கு உள்ளது. எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு சிபாரிசு செய்யுமாறும், இதுபோன்ற கொலை சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறும் ஆளுநரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
அனந்தபூரில் கடந்த மாதம் 29-ம் தேதி பூமிரெட்டி சிவபிரசாத் ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸார் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் களை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரின் இந்தச் செயலைக் கண்டித்து நேற்று அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நாள் பந்த் நடத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன் பேரில் நேற்று காலை முதல் இந்த மாவட்டத்தில் அரசு, தனியார் பஸ்கள் இயங்கவில்லை. கடைகள், வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள் ஓடவில்லை. திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.