

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டத்துக்குப் புறம்பாகத் தயாரிக்கப்படும் ஆயுதங்களை டெல்லி தேசிய தலைநகர் பகுதி (என்.சி.ஆர்.) மற்றும் மேவாட் பகுதிகளில் உள்ள சமூக விரோத கும்பல்களுக்கு கடத்த முயன்ற லாரி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த ஓட்டுநர் பெயர் நைம் (21) என்று தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 7.65 எம்எம் ரகத்தைச் சேர்ந்த 24 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
பிஹார் மாநிலம் பங்கர் பகுதிக்கு அடுத்து மத்திய பிரதேச மாநிலத்தின் கர்கோன், செந்த்வா மற்றும் தார் ஆகிய மாவட்டங்களில் சட்டத்துக்குப் புறம்பாக ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் குற்றத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட டெல்லி காவல் துறையின் சிறப்புப் படை, கடந்த ஓராண்டில் இதில் தொடர்புடைய 45 பேரைக் கைது செய்துள்ளது. மேலும் 285 வகையான துப்பாக்கி கள் உள்ளிட்ட பல ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளது.
அந்தப் படையின் இணை ஆணையாளர் சஞ்சீவ் குமார் யாதவ் இதுகுறித்து கூறியபோது, "ஆயுதக் கடத்தல் கும்பல், சமீப காலத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்களைத் தங்கள் கடத்தல் தொழிலுக்குப் பயன்படுத்தி வருவது தெரிந்தது. எனவே, மகாராஷ்டிரா-டெல்லி நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி மத்திய பிரதேசத்தின் வழியாக டெல்லிக்கு வரும் லாரிகளை சோதனையிடத் தொடங்கினோம். அப்படி ஒரு சோதனையில்தான் நைம் சிக்கினார்" என்றார்.