

ஜம்முகாஷ்மீரில் பாகிஸ்தான் தேசியக் கொடியை பறக்க விட்டது கண்டிக்கத்தக்கது, இதுதொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் அலுவலக விவகாரத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தெற்கு காஷ்மீரில் திரால் பகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஜம்முவில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு இந்தியாவில் இடம் இல்லை என்பது பலமுறை உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மீறி கிலானியின் பொதுக் கூட்டத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏந்தி வந்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மாநில முதல்வர் முப்திமுகம்மது சையது கவனமாக செயல்படுவார் என்று நம்புகிறேன். இத்தகைய பிரச்சினைகளை பாஜக- மக்கள் ஜனநாயக கூட்டணி அரசு திறமையாக சமாளித்து மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். பிரிவினைவாதிகள் விவகாரத்தில் முதல்வர் முப்தி முகமது தலைமையிலான அரசு மிதவாதப் போக்கைக் கையாள்வதாக கூறமுடியாது.
ஸ்ரீநகரில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்தியதற்காக பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்போதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.