

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கு ஸ்மிருதி இராணி பதில் அளித்துள்ளார்.
தனக்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஸ்மிருதி; "எனது கட்சி, என் திறமை மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த பொறுப்பை அளித்துள்ளது. என் செயல்திறனை பார்த்துவிட்டு என்னை விமர்சியுங்கள். எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியில் கவனத்தைச் செலுத்த முடியாமல் என்னை திசை திருப்பும் வகையில் சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்றார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மத்திய மனிதவளம் மற்றும் கல்வித்துறை ஒதுக்கப்பட் டுள்ளது. ஸ்மிருதி இரானிக்கு கேபினெட் அந்தஸ்தில் முக்கிய மான துறை ஒதுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் விமர்சித்திருந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான அஜய் மாக்கன், “மோடியின் அமைச்சரவையில் ஸ்மிருதி இரானிக்கு கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பட்டப்படிப்பு கூட படிக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பதிலடியாக சோனியா காந்தியின் கல்வித் தகுதி குறித்து பாஜக கேள்வியெழுப்பியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.