

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, 42 வருடங்களாக கோமாவில் இருந்த பின் உயிரிழந்த செவிலியர் அருணா ஷன்பாக் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க விருது வழங்கப்பட உள்ளது.
இதை மத்திய பிரதேச மாநில சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'பெண் கொள்கை'யில் அறிவித்த முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், பாலியல் குற்றங்களுக்கு எதிராக பணியாற்றுபவர்களுக்காக இந்த விருது அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
போபாலில் நடந்த பெண்கள் பஞ்சாயத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் சிவராஜ்சிங், நாட்டின் எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் முதன்முறையாக 'பெண் கொள்கை' என ஒன்றை அரசு சார்பில் அறிமுகப்படுத்தினார். இந்த கொள்கையின்படி ம.பி. மாநில பெண்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றாக செவிலியர் ஷன்பாக் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவராஜ்சிங் கூறுகையில், "அருணாவுக்கு நடந்த கொடுமை மிகவும் வருந்தக்கூடியது. இதை உணரும் வகையிலும், செண்பகாவிற்கு மதிப்பளிக்கும் விதத்திலும் அவரது பெயரில் இந்த விருது அளிக்கப்படும். இது பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராகப் போராடும் அமைப்புகள் அல்லது தனிநபர்களுக்கு இந்த விருதினை வருடந்தோறும் வழங்க இருக்கிறோம்" என அறிவித்துள்ளார்.
மேலும் அவர், அருணாவைப் போல் வேறு எந்த பெண்ணும் இந்த கொடுமையை அனுபவிக்காத வகையில் தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
பின்னர் பெண் கொள்கையின்படி மேலும் பல புதிய திட்டங்கள் மற்றும் ரொக்கப்பரிசுகளை சிவராஜ்சிங் அறிவித்துள்ளார். இதில், பால்ய விவாகத்திற்கு எதிராக பணியாற்றும் அமைப்புகளுக்கு இனி, ரூ.51,000 ரொக்கப் பணமும் விருதாக அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக வரும் இளம்பெண்களுக்கு தங்குவதற்கான உதவித்தொகை வழக்கும் எனவும் அதில், அதிகட்சமாக மாதம் ரூ.20,000 வரை நிர்ணயம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். கல்வியில் சிறந்து விளங்கும் ஏழைப் பெண்களுக்கு அவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் உதவித்தொகையும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.