

2002-ம் ஆண்டு கார் விபத்து வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது மும்பை உயர் நீதிமன்றம்.
சல்மான் கான் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவர் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜரானார். நீதிபதி திப்சே முன்னிலையில் இதற்கான விசாரணை நடைபெற்றது.
அப்போது ஹரிஷ் சால்வே, "முறையான உத்தரவின்றி ஒருவரையும் சிறையில் தள்ள முடியாது. இதுவரை, சல்மான் கான் வழக்கறிஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை குறித்த நடைமுறைப் பகுதி மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. முழு உத்தரவு இன்னமும் அவருக்கு வழங்கப்படவில்லை" என்று வாதிட்டார்.
இதனையடுத்து சல்மான் கானுக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சல்மான் கான் இன்னமும் அமர்வு நீதிமன்றத்தில்தான் உள்ளார். இடைக்கால ஜாமீன் உத்தரவு இவர் கைக்கு கிடைத்தவுடன் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.