

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓராண்டு ஆட்சி நிறைவையொட்டி பாஜக தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆஜ் தக் தொலைக்காட்சி சானல் நடத்திய நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் பலரும் தங்கள் ஆட்சி பற்றி ‘சுயபெருமித’ கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
"ஓராண்டுக்கு முன்பு நாட்டின் இளைஞர்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர், வீதிகளில் இறங்கி போராடவும் செய்தனர், ஆனால் 2014 மக்களவைத் தேர்தல்களில் நரேந்திர மோடியின் தலைமையில் நாங்கள் அணிவகுத்தவுடன் தெருவில் இறங்கி போராடிய இளைஞர்கள் பலர் எங்களுடன் அணி வகுத்தனர்.
முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது ஒன்றே இதற்கு சாட்சி. இந்த ஓராண்டு ஆட்சியில் நாட்டின் அரசியல், பொருளாதார சூழலையே மாற்றியுள்ளோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு அமைச்சரும் தங்களை பிரதமராகக் கருதிக் கொண்டனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் அலுவலகம் இழந்த பெருமைகளை இப்போது நாங்கள் மீட்டுளோம்.
ஒவ்வொரு துறையிலும் புதிய தொடக்கங்களைக் கண்டுள்ளோம். கொள்கை முடிவுகளில் மாநில அரசுகளை பெருமளவில் ஈடுபடுத்தியுள்ளோம். நிதி ஆயோக் என்றாலும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடாயினும் மாநில அரசுகளை கொள்கை முடிவில் ஈடுபடுத்தியுள்ளோம்.
நடப்பு ஆட்சி வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது, ஊழல் குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்த முடியாது.
நடப்பு ஆண்டின் இறுதியில் நடைபெறும் பிஹார் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும்” என்றார் அமித் ஷா.