

முன்னணி தெலுங்கு நடிகரும், மறைந்த என்.டி.ராமாராவின் வாரிசுமான பாலகிருஷ்ணா, விரைவில் சீமாந்திரா மாநில அமைச்சராக உள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
ஆந்திர மாநில அரசியல், கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திருப்பங்களை சந்தித்தது. ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு முதல்வர்கள் மாற்றம், தெலங்கானா போராட்டம் தீவிரமடைதல், மாநிலப் பிரிவினை முடிவு, இதற்கு எதிரான போராட்டங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் என பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இம்மாநிலம் சந்தித்தது.
வரும் ஜூன் 2-ம் தேதி முதல் தெலங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. இவற்றில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுள்ளது.
சீமாந்திராவில், 102 தொகுதி களை கைப்பற்றி தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதன் தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 2-ம் தேதிக்கு பிறகு முதல்வராக பதவியேற்க உள்ளார். இவரது அமைச்சரவையில் இடம் பிடிப்பவர்கள் யார் என்பதே தற்போது விவாதப் பொருளாக உள்ளது.
இந்நிலையில், அனந்தபூர் மாவட்டம் இந்துபூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தனது மைத்துனரும், நடிகருமான பாலகிருஷ்ணாவுக்கு முக்கிய துறை ஒதுக்க சந்திரபாபு நாயுடு சம்மதம் தெரிவித்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
பாலகிருஷ்ணா அமைச்சர் ஆவது உறுதி என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.