

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், நாடு முழுவதும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.09 அதிகரிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலாகிறது.
அதேவேளையில், பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் உடனடியாக டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.1.09 (உள்ளூர் வரிகள் நீங்கலாக) அதிகரிக்கப்பட்டது.
இன்றைய விலை உயர்வை சேர்க்காமல் பார்க்கும்போது, கடந்த 2013 ஜனவரியில் இருந்து டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.33 அதிகரிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
தேர்தல் முடிவடைந்த நிலையில், எண்ணெய் விலையை மாற்றிக் கொள்வது பற்றி மத்திய அரசு முடிவு செய்து கொள்ளலாம் என அனுமதி அளித்தது.
இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சற்று ஈடு செய்யும் வகையில் டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
இன்றையை விலை உயர்வைக் கருத்தில் கொண்டாலும், டீசல் விலையால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5.71 இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் சந்திப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.