

முன்னாள் சட்ட அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜேத்மலானி, சீனாவுடனான எல்லை பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடியை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
"சீனாவுக்கு எதிரான எல்லைப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்... இதனை நான் பிரதமருக்கு சீன பயணத்துக்கு முன்னதாக கடிதம் மூலம் அறிவுறுத்தினேன்.
எல்லைப் பிரச்சினையில் இந்தியத் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க நான் தயாராகவே இருக்கிறேன்.
சீனாவுடன் இந்த விவகாரத்தில் போருக்கு நாம் விரும்பவில்லை, சட்ட ரீதியாக இந்தப் பிரச்சினைக்கு அமைதி வழி தீர்வு காண விரும்புகிறோம் அவ்வளவே.
எல்லைப் பிரச்சினைகள் குறித்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர்கள் ஒருவரும் தீர்வு காணவில்லை, வாஜ்பாய் உட்பட.” என்று சாடினார் ராம் ஜேத்மலானி.
மும்பையில் இலக்கிய விழாவில் கலந்து கொண்ட ராம் ஜேத்மலானி, கருப்புப் பண விவகாரம் குறித்தும் பேசினார், “என்னுடன் கருப்புப் பண போராட்டத்துக்கு முன்னதாக இணைந்தவர்கள் என்னை விட்டு விலகினாலும் தனி மனிதனாக இதற்காகப் போராடுவேன்.
சட்டவிரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட தொகை 1,500 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது, சுமார் ரூ.90 லட்சம் கோடி. அந்தத் தொகையை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வர தனிநபராகப் போராடுவேன்” என்றார்.