

இந்திய அரசியலமைப்பு சட்ட சிற்பிகளில் ஒருவரான பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை இந்த ஆண்டு முழுவதும் விமரிசையாக கொண்டாடுவது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தலித் இனத்தின் தலைவராக போற்றப்படும் பி.ஆர்.அம்பேத்கர் மீது உரிமை கொண்டாடுவதில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மாநிலங்கள் சார்பில் இந்த ஆண்டு முழுவதும் விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், எம்.வெங்கய்ய நாயுடு, ஸ்மிருதி இரானி, சதானந்த கவுடா, ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் சுரேஷ் பிரபு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
16 நிகழ்ச்சிகள்
அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் தத்துவங்களை மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில், 16 முக்கிய நிகழ்ச்சிகள் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக ரூ.197 கோடி செலவில் அம்பேத்கர் சர்வதேச மையம் நிறுவப்படும்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின பேரணியின் போது, அம்பேத்கர் குறித்த ஒப்பனைக் காட்சி ஊர்தி இடம்பெறும். அம்பேத்கர் நினைவு தபால் தலை மற்றும் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படும். டெல்லியில் ரூ.99 கோடியில் நினைவிடம் அமைக் கப்படும். அம்பேத்கர் பற்றிய கட்டுரைகள் அடங்கிய சிறப்பு மலர் வெளியிடப்படுவதுடன், பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
29 நகரங்களின் தரம் உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை மற்றும் போக்கு வரத்துப் படியை அதிகரிப்பதற்கு வசதியாக, நாடு முழுவதும் உள்ள 29 நகரங்களின் தரத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த தகவலை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டுள்ள இந்த நடவடிக்கை, கடநத 2014-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு 2014-15 நிதியாண்டில் கூடுதலாக ரூ.128 கோடி செலவாகும்.
ஆள்கடத்தல் தடுப்பு
பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்துக்கு செல்ல உள்ள நிலையில், இரு நாடு களுக்கிடையிலான ஆள் கடத்தலைத் தடுப்பது தொடர்பான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச் சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலைத் தடுக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. கடத்தல் புகார்களை விரைவாக விசாரித்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தாயகத்துக்கு அனுப்பி வைக்கவும், கடத்தல்காரர்களுக்கு உரிய தண்டனை வழங்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்.