

கங்கை நதியை சுத்தப்படுத்தி, பாதுகாக்கும் திட்டமான 'நமாமி கங்கா' திட்டத்துக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "கடந்த 30 ஆண்டுகளில் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு 4 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 'நமாமி கங்கா' திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அக்கூட்டத்தில், கங்கை நதியை சுத்தப்படுத்த ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அரசு செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "கடந்த 30 ஆண்டுகளில் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு 4 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து ஐந்து ஆண்டுகளில் இத்திட்டதை செயல்படுத்தி முடிப்பதே இலக்கு. 1985-ல் இருந்து கங்கை நதியை தூய்மைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கும் ரூ.4,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த முறை மத்திய அரசு தனது இலக்கை அடைவதில் உறுதியாக இருக்கிறது.
கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை திறம்பட முடித்திட கங்கைக் கரையோரம் வாழும் மக்களை பயன்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் முந்தைய அரசுகள் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளும் வகையில், கங்கைக் கரையோர மாநில அரசுகளையும், உள்ளூர் பஞ்சாயத்துகளையும் தூய்மை கங்கா திட்டத்தில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
'நமாமி கங்கா' திட்டத்தின் கீழ், கங்கை நதியில் கழிவு நேரடியாக கலப்பது கண்காணிக்கப்படும். கழிவு நீரை சுத்திகரித்து பின்னர் அது நதியில் கலக்க அனுமதிக்கப்படும்.
இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமே, சமூக - பொருளாதார நலன் சார்ந்தது. கங்கை நதியை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் லட்சியம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.