

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனை உறுதி செய்யப்பட்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிமுக வழக்கறிஞர்கள் டெல்லியில் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பு காலை 11 மணிக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக வரவில்லை என்றால், எந்த மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து டெல்லியில், ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் நேற்று முதலே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டத்தாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜெயலலிதா மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டால், உடனடியாக ஜாமீன் கோரியும்; கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அவர் சரணடைய விலக்கு அளிக்கக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கும், அவரது வழக்கறிஞர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மூத்த சட்ட நிபுணர்களின் ஆலோசனையின் படி, தெளிவான விவரங்களுடன் மனு தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஒருவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து முன் ஆஜராகி, 'ஜெ.,வுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கும்படி, அவசர உத்தரவு பிறப்பிக்கவேண்டும்' என்று வாதாட தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிகிறது.