Published : 22 May 2014 11:00 AM
Last Updated : 22 May 2014 11:00 AM

உத்தரகண்ட் அரசை காப்பாற்ற காங்கிரஸ் புதிய முயற்சி: மக்களவைத் தேர்தல் தோல்வி எதிரொலி

உத்தரகண்டில் தனது அரசைக் காப்பாற்றுவதற்கான புதிய முயற்சியாக, பத்து எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கி உள்ளது காங்கிரஸ். மக்களவைத் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக அம்மாநில முதல் அமைச்சர் ஹரீஷ் ராவத் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரகண்டில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் புதிய விதிகளின்படி 15 சதவிகிதமாக 11 அமைச்சர்கள் உள்ளனர். இதற்கு மேல் அமைச்சரவையை விரிவுபடுத்த முடியாது என்பதால், பத்து எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி மட்டும் அளித்து, இலாகா ஒதுக்கப்படவில்லை.

மக்களவைத் தேர்தல் தோல்வி எதிரொலியாக இங்குள்ள காங்கிரஸ் அரசிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

இதுகுறித்து, 'தி இந்து'விடம் உத்தரகண்ட் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுரேந்தர் குமார் அகர்வால் கூறுகையில், ‘‘தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் ஆராய்ந்து வருகிறது.

கட்சித் தாவலைத் தடுப்பதற்காக அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது என்பது தவறான தகவல். அடுத்த மாதம் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலையில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது’’ என மறுக்கிறார்.

கடந்த மார்ச் 2012-ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு 33 இடங்கள் மட்டுமே கிடைத்தது. எனினும், பகுஜன் சமாஜின் 3, மற்றும் 5 சுயேச்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸின் முதல்வரானார் விஜய் பகுகுணா. 28 இடங்களைப் பெற்ற பாரதிய ஜனதா எதிர்கட்சியாக அமர்ந்தது.

ஆனால், முதல்வர் விஜய் பகுகுணாவால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு உத்த ரகண்டின் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று தர இயலாது என எழுந்த சர்ச்சையால் அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சரான ஹரீஷ் ராவத், புதிய முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.

விஜய் பகுகுணாவை சமாதனப் படுத்த அவரது மகன் சாக்கேத் பகுகுணாவிற்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும் இங்கு அனைத்து தொகுதி களையும் பாஜக கைப்பற்றியது.

மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்பாக காங்கிரஸ் எம்பி சாஹுஜி மஹராஜ் பாஜகவில் இணைந்தார். இதனால், உத்தரகண்டின் முக்கிய தலைவரான சாஹூஜியின் மனைவி அம்ரிதா ராவத்தின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இவரைப்போல், காங்கிரஸின் ஏழு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் மீது அதிருப்தியில் உள்ளனர். இவர்களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்கள் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வைத்து அவைகளுடன் உத்தரகண்டின் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயல்வதாக சர்ச்சை கிளம்பியது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவின் ஐந்து எம்பிக்களில் இருவர் எம்.எல்.ஏ.க்கள் என்பதால் அவர்கள் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை தடுப் பதற்காக கடந்த ஞாயிற்றுக் கிழமை பத்து பேருக்கு அமைச் சர்களுக்கான அந்தஸ்து அளித்துள்ளார் முதல்வர் ராவத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x