

பஞ்சாபில் மானபங்கபடுத்தப்பட்டு பேரூந்தில் இருந்து கீழே தள்ளியதில் சிறுமி இறந்த சம்பவத்தை அடுத்து, அந்த பஸ்ஸை இயக்கும் ஆர்பிட் ஏவியேஷன் நிறுவனத்தின் பஸ்களை இயக்க பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதல் தடை விதித்து நேற்று உத்தரவிட்டார்.
இதனிடையே, உயிரிழந்த சிறுமியின் சடலத்தை எரித்து இறுதிச் சடங்கு செய்ய பெற்றோர் மறுத்துவிட்டனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை சுக்தேவ் சிங் கூறும் போது, “அந்த பஸ்ஸின் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து நியாயம் வழங்கினால் மட்டுமே சடலத்தை எரிப்போம். மேலும் எங்கள் குடும்பத்துக்கு எவ்வித தீங்கும் நேராது என எழுத்துப்பூர்வ கடிதம் தரப்படவேண்டும்.
எனது மகன் உட்பட குடும்பத்தினருக்கு முழ பாதுகாப்பு வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்” என்றார்.
ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்
மோகா சம்பவத்தைக் கண்டித்து சண்டீகரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது, முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் பி.எல்.புனியா, மோகா சம்பவத்தில் பலியான சிறுமியின் தாய் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தார். அப்போது, பஸ்ஸை இயக்கும் ஆர்பிட் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சிறுமியின் தாய் கோரிக்கை வைத்தார்.