Last Updated : 17 Mar, 2014 12:00 AM

 

Published : 17 Mar 2014 12:00 AM
Last Updated : 17 Mar 2014 12:00 AM

மோடியால் வாரணாசியில் ஆறு முனைப் போட்டி: பாஜகவின் 4-வது பட்டியலில் 93 பேர்

வாரணாசி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நரேந்திர மோடி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதால் அங்கு ஆறு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

பத்து மாநிலங்களுக்கான நான்காவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், மோடி தவிர, கட்சியின் முக்கிய தலைவர்களான ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 93 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 69 பேர் உபி வேட்பாளர்கள். பாஜக இதுவரை 203 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

உபியின் காசி அல்லது பனாரஸ் என அழைக்கப்படும் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட இருப்பதாக கௌமி ஏக்தா தளத்தின் கிரிமினல் எம்.எல்.ஏ.வான முக்தார் அன்சாரி கூறியிருந்தார். இதேபோல், ஆம் ஆத்மி சார்பில் அதன் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவாலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

இதனால், பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி மற்றும் கௌமி ஏக்தா தளம் என ஆறு முனைப்போட்டி நடைபெற உள்ளது.

வாரணாசி தொகுதியில் எம்.பி.யாக உள்ள பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, அந்தத் தொகுதியை மோடிக்கு விட்டுக்கொடுக்க தயக்கம் காட்டியதால் ஏற்பட்ட குழப்பத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது.

இதுபோல கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு லக்னோ தொகுதியை விட்டுக் கொடுக்க அதன் இப்போதைய எம்பியான லால்ஜி டாண்டண் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் இந்த எதிர்ப்புகளை மீறி, ராஜ்நாத் சிங் லக்னோவிலும் மோடி வாரணாசியிலும் முரளி மனோகர் ஜோஷி கான்பூரிலும் போட்டியிடுவார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது.

சமரசம்

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் பாஜக வட்டாரம் கூறுகையில், "லால்ஜியை முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறி சமாதானம் செய்துள்ளனர். அதேபோல் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஜோஷியை சமாதானப்படுத்தி உள்ளனர்" என்றனர்.

தொகுதி மாறும் வருண்

உ.பி.யில் இப்போது பாஜக வசம் உள்ள 10 மக்களவைத் தொகுதி களில் ஆய்வு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, சரியாக பணியாற்றாததால் வருண் காந்தி க்கு அவரது தந்தை சஞ்சய் காந்தி முதன்முறையாக போட்டியிட்டு வென்ற சுல்தான்பூர் ஒதுக்கப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2009-ல் வருண் காந்தி வென்ற பிலிபித் தொகுதி, அவரது தாய் மேனகா காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேனகாவின் தற்போதைய தொகுதியான பரேலியில் முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்குவார் நிறுத்தப்பட்டுள்ளார். யோகி அதித்யநாத் மீண்டும் கோரக்பூரில் போட்டியிடுகிறார்.

மபியில் இருந்து உபியில் எம்.எல்.ஏ.வாக்கப்பட்ட உமா பாரதி ஜான்சியிலும், தேவரியாவில் கல்ராஜ் மிஸ்ராவும் போட்டியிடு கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் பாஜகவில் மீண்டும் இணைந் திருக்கும் உபியின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவரது மகன் ராஜ்வீர் சிங்கிற்க்கு ஏட்டா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பிஹாரின் பாட்னா சாஹேபின் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹாவை டெல்லிக்கு மாற்றுவதாக கூறப்பட்டது இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவருக்கு அதே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி முதன் முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறார். அவருக்கு பஞ்சாபின் அமிர்தசரஸ் தொகுதி ஒதுக்கப்பட் டுள்ளது. இந்தத் தொகுதியின் இப்போதைய எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்துவுக்கு டெல்லியில் வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், "நான் வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன்" என உறுதியாகக் கூறிவிட்டார்.

உத்தரகண்டின் 5 தொகுதிகளில் அம்மாநிலத்தின் மூன்று முன்னாள் முதல்வர்கள் போட்டியிடுகின்றனர். டெல்லியின் 7 தொகுதிகளில் அதன் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட எம்.எல்.ஏ.வான டாக்டர். ஹர்ஷவர்தன் சாந்தினி சௌக் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். கங்கிரஸ் எம்பி கபில்சிபல் வசம் உள்ள இங்கு ஆம் ஆத்மி சார்பில் முன்னாள் பத்திரிகையாளரான அசுதோஷ் போட்டியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x