

நாடு முழுவதும் 101 ஆறுகளை நீர்வழிப் பாதைகளாக மாற்றுவது தொடர்பான மசோதா நாடாளு மன்றத்தில் வரும் 5-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
மேகாலய மாநிலத்தில் பைபாஸ் சாலை ஒன்றை நேற்று திறந்துவைத்த நிதின் கட்கரி, பின்னர் இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் கூறியதாவது: உள் நாட்டு நீர்வழிப் பாதை மசோதா வரும் செவ்வாய்க்கிழமை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்படும். சாலை மற்றும் ரயில் போக்கு வரத்தை விட நீர்வழிப் போக்கு வரத்து சிக்கனமானது. எனவே நீர்வழித் தடங்களை மேம்படுத்து வது அரசின் முன்னுரிமைப் பணியாக உள்ளது.
இதுவரை 5 நதிநீர் வழித் தடங்கள் தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட் டுள்ளன. கூடுதலாக உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கு 101 வழித்தடங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
நீர்வழிப் பாதையில் 1 கி.மீ. பயணத்துக்கு 50 பைசா மட்டுமே செலவாகிறது. இதுவே ரயில் போக்குவரத்தில் ரூ.1-ம், சாலைப் போக்குவரத்தில் ரூ.1.50-ம் செலவாகிறது. எனவே நீர்வழிப் போக்குவரத்தை அரசு மேம்படுத்த உள்ளது.
நாடு முழுவதும் ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், ஓடைகள் என 14,500 கி.மீ. தூரம் நீர்வழித் தடம் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கு ஏற்றதாக உள்ளது. ஆனால் இதுவரை இது முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.
எனவே நீர்வழித் தடங்களை நீர்வழிப் பாதைகளாக மாற்று வதுடன், உலர் துறைமுகங்கள், துணை துறைமுகங்கள் ஏற்படுத்தவும், பிரதமர் ஜல் மார்க் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.