Published : 22 May 2015 07:21 AM
Last Updated : 22 May 2015 07:21 AM

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க தடை கோரியவருக்கு அபராதம்: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் ரவிராஜ் குருராஜ் குல்கர்னிக்கு கண்டனம் தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவ‌ட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரவிராஜ் குருராஜ் குல்கர்னி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜெயலலிதா மீண்டும் முதல் வராக பொறுப் பேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உச்ச நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளி வராத நிலையில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க கூடாது.

எனவே கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு தடைவிதித்து, முதல்வராக பதவியேற்பதற்கும் தடை விதிக்க வேண்டும்'' என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.என்.வேணுகோபால‌ கவுடா மற்றும் பி.வீரப்பா ஆகியோரடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‘‘மனுதாரர் ரவிராஜ் குருராஜ் குல்கர்னி தனது மனுவின் நோக்கத்தை தெளிவாக குறிப்பிடவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு நகலையும் மனுவுடன் இணைக்கவில்லை. மேலும் தீர்ப்பாணையின் சாராம்சத்தை தெளிவாக குறிப்பிட வில்லை.

மேலும் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் எப்படி தடை விதிக்க முடியும்? இதில் உள் நோக்கம் இருப்பதாக நீதிமன்றம் சந்தேகிக்கிறது.

விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேவையற்ற மனுவை தாக்கல் செய்து விடுமுறை கால கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக ரவிராஜ் குருராஜ் குல்கர்னிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது''என தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x