

மத்தியில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெற இருக்கும் வேளையில், மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த ‘வெற்றிக் கதைகளை' தனக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மாதம் 26ம் தேதியுடன் புதிய மத்திய அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்தச் சமயத்தில் கிராமப் பொருளாதாரம் தொடர்பான மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் தங்கள் மாநிலத்தில் எப்படியெல்லாம் வெற்றி அடைந்துள்ளன என்பது குறித்து அறிக்கை அனுப்ப மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மத்திய அரசின் பிரதம மந்திரி ஊரக சாலைத் திட்டம் 2014-15ம் ஆண்டில் எவ்வாறு வெற்றியடைந்துள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கேரளம், கர்நாடகா மற்றும் அதிமுக ஆளும் தமிழகம் உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிடம் இவ்வாறு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு அளிக்கப்படும் அறிக்கையானது சுருக்கமாக 600 வார்த்தைகளுக்குள் இருக்கும்படியாகவும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் என்ன வகையான புதுமை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்தும், இந்தத் திட்டத்தால் பயனடைந்தவர்கள் யார், எவ்வாறு பயனடைந்தார்கள் என்பது குறித்தும் தகவல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
குஜராத், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மிசோரம், அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் இவ்வாறு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கை அளிப்பதன் மூலம் அந்த வெற்றிச் சூத்திரங்களின் அடிப்படையில், அதே திட்டத்தை மற்ற மாநிலங் களிலும் வெற்றிகரமாகச் செயல் படுத்த முடியும் என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.