Published : 30 May 2014 06:55 PM
Last Updated : 30 May 2014 06:55 PM

பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான விரைவு நடவடிக்கைக்கு புதிய அமைப்பு: மேனகா அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தில் தலித் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அம்மாநில காவல்துறையை குறை கூறிய மத்திய அமைச்சர் மேனகா காந்தி, இத்தகைய சம்பவங்களுக்கு எதிரான விரைவு நடவடிக்கைக்கு புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் 14 மற்றும் 15 வயதுடைய தலித் சகோதரிகள் இருவர், 7 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தில் அம்மாநில அரசுக்கு பெரும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. ( முழு விவரம்:>தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம்: நெருக்குதலால் உ.பி. அரசு தீவிர நடவடிக்கை).

இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி இன்று கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தில் இரு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு காவல்துறையினரே பொறுப்பு. அவர்கள் செயல்பட தாமாதப்படுத்தியதால் இரு சிறுமிகளும் உயிரிழக்க நேர்ந்தது. இப்போதும்கூட காவல்துறையினர் சரியான நடவடிக்கைகளை இந்த விவகாரத்தில் எடுத்ததாக தெரியவில்லை.

இந்தப் புகாரின் பேரில் செயல்படாமல் தாமதப்படுத்திய காவல்துறை அதிகாரிகளை நீக்க வேண்டும். சிறுமிகளின் பெற்றோர் கேட்டுக்கொண்டால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடப்படும். மேலும், இதுபோன்ற பலாத்கார சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைந்து முடிக்கும் வகையில் 'ரேப் க்ரைசிஸ் செல்' என்ற அமைப்பு உருவாக்கப்படும்" என்றார்.

இந்நிலையில் சில குற்றவாளிகள் தலைமறைவாகினர். அவர்களில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். இதுவரையில் இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் தொடர் போராட்டம்

தலித் சிறுமிகள் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் அரசுக்கு தற்போது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் தொகுதியான பாடுவானில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் அகிலேஷ் அரசுக்கும், அவரது கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலாத்கார சம்பவம் நடந்த பாடுவான் பகுதியில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாயாவதி வலியுறுத்தல்

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவது கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது. எனவே, அங்கு ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" என்றார்.

இதனிடையே, இந்த வழக்கில் நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருவதாகவும், தவறு செய்த அதிகாரிகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x