

நடிகர் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை விதிப்பதால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எங்களுக்குத் தேவை எல்லாம் இழப்பீடு மட்டுமே என கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், 2002-ல் நடந்த அந்த விபத்தில் தனது காலை இழந்த அப்துல்லா ரவுஃப் ஷேக், "நடிகர் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை விதிப்பதால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எங்களுக்குத் தேவை எல்லாம் இழப்பீடு மட்டுமே.
இந்த 13 ஆண்டுகளில் என்னை யாரும் வந்து பார்த்ததில்லை. சிறு வேலைகள் செய்து என் குடும்பத்தை மிகவும் கஷ்டப்பட்டு காப்பாற்றி வருகிறேன்.
இருப்பினும், சல்மான் கான் மீது நான் எப்போதும் விரோதம் கொண்டதில்லை. இன்றளவும் அவரது படங்களைப் பார்த்து வருகிறேன்.
சல்மான் தண்டிக்கப்படுவதால் மட்டும் நான் இழந்த கால் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக எங்கள் வாழ்வாதாரத்துக்கு போதிய இழப்பீடு வழங்கினால் அதுவே போதுமானது" என்றார்.
இதேபோல், கார் விபத்தில் பலியான் நூருல்லா மெஹ்பூப் ஷரீபின் மனைவி கூறும்போது, "எங்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆனால், நாளுக்கு நாள் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் அந்தப் பணம் எங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று கூற முடியாது. எனவே, என் மகனுக்கு ஒரு வேலை கிடைத்தால் போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.