

புதுடெல்லி: இந்தியாவை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் கட்சியும், சில சமூக செயற்பாட்டாளர்களும் சேர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதிகள் 42 பேர் கூறியுள்ளனர்.
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில், தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் கட்சியும், சில சமூக செயற்பாட்டாளர்களும் சேர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதிகள் 42 பேர் கூறியுள்ளனர்.
இது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் பங்கஜ் மித்தல், உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் பி.சி.படேல், சுப்ரோ கமல் முகர்ஜி மற்றும் பெர்மோத் கோஹ்லி உள்ளிட்டோர் கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு: ‘இந்த நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த ஒரு கட்சி இப்போது தன்னைத் தேர்ந்தெடுத்த அதே அமைப்பை மோசடி அமைப்பு என்கிறது.
தேர்தல் ஆணையத்தை எதிர்க்கும் அக்கட்சி தனித்து செயல்படவில்லை. சமூக செயற்பாட்டாளர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சில குறிப்பிட்ட அமைப்புகள் அக்கட்சியின் முன்னெடுப்புகளுக்கு சட்டப்பூர்வ தோற்றத்தை அளிக்கின்றன.
அந்தக் கட்சியினரும், கூட்டாளிகளும் ஒன்றன்பின் ஒன்றாக மனுக்களை தாக்கல் செய்கின்றனர். ஆனால் மிக அரிதாகவே ஆதாரங்களை தாக்கல் செய்கிறார்கள். நீதிமன்ற அறை ஒரு மேடையாகிறது, தீர்ப்பு வழங்கப்பட்டு, அது தங்களுக்கு சாதகமாக இல்லாத போதெல்லாம் விமர்சிக்கின்றனர்.
அதன்பின்னர், பொதுமக்களின் நம்பிக்கையை நன்கு நிறுவப்பட்ட மற்றும் பரவலாக நம்பப்படும் நீதித்துறை அமைப்பின் மீது இருந்து அழிப்பதை வேண்டுமென்றே மேற்கொள்கின்றனர்.
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்களில் அல்லாது பத்திரிகையாளர் சந்திப்புகளில் முன்வைக்கின்றனர். தேர்தல் ஆணையம் உறுதிமொழி அறிக்கையைக் கோரினால், எதுவும் தாக்கல் செய்வதில்லை. தோல்விக்குப் பிறகு மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறை கூறப்படுகின்றன. அதே இயந்திரங்களில் கிடைத்த வெற்றிகள் கேள்விக்கு உட்படுத்தப்படுவதே இல்லை.
இவ்வாறாக அவர்கள் மேற்கொள்ளும் அரசியலமைப்பு நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் நியாயமான விமர்சன எல்லைகளை தாண்டிவிட்டது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் பொதுப்படையான குற்றச்சாட்டுகள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவும் எந்த நீதிமன்றத்தாலும் நிறுவப்படவில்லை.
இந்திய தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகள் மீதான இத்தகைய விமர்சனப் போக்கு, அரசமைப்பு நிறுவனங்கள் மீதான பொது மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தக் கூடும். வாக்காளர் பட்டியல்களை திருத்துவதில் ஆணையத்தின் பங்கு முக்கியமானது. துல்லியமான வாக்காளர் பட்டியல்களையும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களையும் அது உறுதி செய்கிறது.
அரசியல் கட்சிகள் தங்கள் புகார்களை ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் மூலம் தொடர வேண்டும். ஊடகங்களும், இத்தகைய விவகாரங்களை கூற்றுகளை வெளியிடுவதற்கு முன் சரிபார்க்க வேண்டும்.
ஆர்ப்பாட்டக்காரர்களும் அமைதியான முறையில் தங்கள் உரிமைகளை முன்னெடுக்க வேண்டும்’ என்று அக்கடிதத்தில் கூறியுள்ளனர்.