Published : 12 May 2015 01:01 PM
Last Updated : 12 May 2015 01:01 PM

7.5 ரிக்டர் அலகில் மீண்டும் உலுக்கியது நிலநடுக்கம்: நேபாளத்தில் 57; இந்தியாவில் 17 பேர் பலி - 1000 பேர் படுகாயம்; டெல்லி மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

நேபாளத்தில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 57 பேர் உயிரி ழந்தனர். இந்த நிலநடுக்கம் பிஹார் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங் களில் கடுமையாக உணரப்பட்டது. இங்கு 17 பேர் பலியாயினர்.

கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நேபா ளத்தை நிலநடுக்கம் உலுக்கியது. இது ரிக்டர் அலகில் 7.8 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதன்பிறகு நேபாளம் முழுவதும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் நீடித்தன.

எவரெஸ்ட் அருகே மையம்

இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணி அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் 25 விநாடிகள் நீடித்தது. கிழக்கு நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரம் அருகில் நாம்சி நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இதில் தலைநகர் காத்மாண்டு உட்பட அந்த நாடு முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலை, தெருக்களில் தஞ்சமடைந்தனர். நேபாள நாடாளுமன்ற கட்டிடம் குலுங்கி யதால் அவையில் இருந்த எம்.பி.க்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.3 ஆகப் பதிவானது. அடுத்தடுத்து மொத்தம் 7 முறை நிலஅதிர்வு ஏற்பட்டதாக நேபாள புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

57 பேர் பலி

சாதரா, சான்கு, சிந்துபால் சவுக், லூக்லா, ராமேசாகப், டோலகா, பக்தாபூர், லக்திபூர், தலைநகர் காத்மாண்டு ஆகிய பகுதிகளில் அதிக பாதிப்புகள் நேரிட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சுமார் ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏற்கெனவே மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் இப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் அரை மணி நேரம் மூடப்பட்டது. நகரில் பல மணி நேரம் சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்தியாவில் கடும் பாதிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் கடுமை யாக உணரப்பட்டது. தலைநகர் டெல்லி, பிஹார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.

பிஹார் மாநிலத்தில் தலைநகர் பாட்னா உட்பட பல்வேறு இடங் களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பாட்னா, சிவன், தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் உயிரிழப் புகள் நேரிட்டுள்ளன. அந்த மாநிலத்தில் 16 பேர் உயிரிழந்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் சில விநாடிகள் நிலஅதிர்வு நீடித்தது. இதனால் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. வீடுகள், அலுவலகங்களில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்து சாலை, தெருக்களில் குவிந்தனர்.

கொல்கத்தாவில் அதிர்வு

மேற்குவங்க தலைநகர் கொல் கத்தாவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் சாலை களில் திரண்டனர். லேக் டவுன், சால்ட் லேக், தல்ஹவுசி மற்றும் பார்க் ஸ்ட்ரீட், சிலிகுரி ஆகிய பகுதி களிலும் நிலநடுக்கம் உணரப் பட்டது. உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. தனது வீட்டில் இருந்த முதல்வர் அகிலேஷ் யாதவ், பாதுகாப்பு அலுவலர்களுடன் வெளியே வந்தார். அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டது.

அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 7.1 ஆகப் பதிவானது. வீடுகள் மற்றும் அலுவல கங்களில் இருந்து மக்கள் பதறி யடித்துக் கொண்டு வெளியே வந்தனர். எனினும் பொருட் சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்ட தாகத் தகவல் இல்லை

குஜராத்தில் அகமதாபாத், காந்திநகர், சூரத், வடோதரா ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப் பட்டது. இங்கு அது ரிக்டர் அலகில் 3 ஆகப் பதிவானது. ஒடிசாவில் கட்டாக், பலசூரு, சம்பல்பூர், பெர்ஹாம்பூர், குர்தா, ரூர்கேலா, கஞ்சம், பரிபடா, கேந்திரபரா, நபரங்பூர் என மாநிலத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

உத்தராகண்ட் மாநிலத்தில் டேராடூன், ஹரித்வார், நைனிடால் மற்றும் பிதோராகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 17 பேர் உயிரிழந்தி ருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் டெல்லி மற்றும் காத்மாண்டில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

நேபாளம், இந்தியா தவிர்த்து சீனா, ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பூடான் உள்ளிட்ட நாடுக ளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்த நாடுகளில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக உதவி எண்கள்: (+977) 9851107021; (+977) 9851135141

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x