

கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் ரூ.5,346 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அமலாக்கத் துறை கடந்த டிசம்பர் மாதம் வரை ரூ. 3,657 சொத்துகளை முடக்கியிருந்தது. இந்நிலையில் சமீபத்திய சொத்து முடக்க நடவடிக்கை மூலம், 2014-15-ம் நிதியாண்டில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த கால சாதனை அளவுகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
அமலாக்கத் துறை தினத்தை யொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் இதன் தலைவர் ராஜன் கடோத் இத் தகவலை தெரிவித்தார்.
விழாவில் அவர் மேலும் பேசிய தாவது: மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படு கிறது. இந்த நடவடிக்கைகளில் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு தீவிரமாக இருந்தது. இதன் மூலம் முந்தைய ஆண்டு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இத்துறையின் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டதன் மூலமே இதை சாதிக்க முடிந்துள்ளது.
ஹவாலா மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றங்களில் 2014-15-ல் 1,918 வழக்குகளில் விசாரணையை முடித்துள்ளோம். இது முந்தைய ஆண்டை விட (1,816) அதிகமாகும். கடந்த நிதியாண்டில் 2,000 தொடக்க நிலை விசாரணைகளும் முடிக்கப் பட்டுள்ளன. அந்நியச் செலாவணி நிர்வாக சட்ட மீறல் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பணத்துக்கு எதிரான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் அமலாக்கத் துறையில் போதிய அளவு பணியாளர்கள் இல்லாததது மிகப்பெரிய சவா லாக உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராஜன் கடோச் பேசினார்.
இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வருவாய்த் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.