அதிகார வர்க்கம் மட்டுமே கொண்டாடும் ஓராண்டு மோடி அரசு: ராகுல் காந்தி கருத்து

அதிகார வர்க்கம் மட்டுமே கொண்டாடும் ஓராண்டு மோடி அரசு: ராகுல் காந்தி கருத்து
Updated on
1 min read

மோடியின் ஓராண்டு ஆட்சியை சாதாரண மக்கள் யாரும் கொண்டாடவில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் ராகுல் காந்தி காந்தி கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், பாஜக ஆட்சியின் ஓராண்டு ஆட்சியை அரசுக்கு நெருக்கமான அதிகார வர்க்கத்தினர் மட்டுமே கொண்டாட முடியும். சாதாரண மக்கள் கொண்டாடுவதற்கு மோடி ஆட்சியில் சிறப்பாக ஒன்றும் இல்லை.

விவசாயிகளும், சிறு தொழில் முனைவோரும் மோடி ஆட்சியின் கீழ் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாஜக மேற்கொள்ளும் ஓராண்டு கொண்டாட்டத்தில் அரசுக்கு நெருக்கமான அதிகாரம் படைத்த சிலர் மட்டும் மகிழ்ச்சி கொள்ள முடியும்.

இந்த அரசை சூட்-பூட் அரசு (உயர் ரக கோட் ஆடை மற்றும் காலணியை குறிப்பிடுகிறார்) என விமர்சிப்பதில் தவறில்லை. ஒரு பிரதமர் ரூ.10 லட்சத்துக்கு உடையணிவதை எந்த ஒரு ஏழை விவசாயியும் வரவேற்க மாட்டார்.

அமெரிக்கா, கனடா, சீனா, ஜப்பான் எனச் செல்லும் மோடி இந்தியாவில் எதாவது ஓர் ஏழையின் வீட்டுக்குச் சென்று அவரது கைகளை பற்றிக்கொள்வாரா?

ஆட்சிக்கு வரும் முன் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரத் தொகை வழங்கப்படும் என்றார். ஆனால், அதை செய்தாரா? அதற்கு மாற்றாக விவசாயிகளுக்கு எதிரான நிலச் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். மோடி அரசி அனைத்து வகையிலும் தோல்வியடைந்துவிட்டது" என்றார் ராகுல் காந்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in