

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை எதிர்த்து வரும் 5-ம் தேதி இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் இயங்கும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான ‘நில உரிமை இயக்கம்' டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்திந்திய கிசான் சபா பொதுச் செயலாளர் ஹன்னான் மோல்லாஹ் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
வரும் 5ம் தேதி டெல்லியில் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை எதிர்த்து பேரணி நடைபெறும். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் முதல் தடவை தோற்றுப் போனது. இரண்டாவது முறை அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதுவும் தோற்றுப் போன பிறகு, மூன்றாவது முறையாக தற்போது அந்த அவசரச் சட்டத்தை மசோதாவாக அறிமுகப்படுத்தி அதற்கு அனுமதி பெற்றுவிடலாம் என்று பார்க்கிறது. எனவே, இதனை இன்னும் அழுத்தமாக எதிர்க்க, டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.