

ஆந்திரப் பிரதேச அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆந்திர போக்குவரத்து தொழிற் சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதனையடுத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க் கிழமை நள்ளிரவு முதலே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கிவிட்டனர்.
விஜயவாடா, குண்டூர், குடிவாடா, எலூரு ஆகிய பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்து வசதி இல்லாது காத்துக் கிடக்கின்றனர்.
பண்டிட் நேரு பேருந்து நிலையத்தில், பயணி ஒருவர் பஸ் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் பயணிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
அப்போது, ஒப்பந்த ஊழியர்கள் பேருந்துகளை இயக்க முற்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அரசு பஸ் ஓட்டுநர்கள் ஒப்பந்த தொழிலாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒப்பந்த தொழிலாளர்களும் பேருந்துகளை இயக்கவில்லை.
எனவே, ஆந்திராவில் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்துள்ளது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.