

நிலநடுக்கங்களை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பம் தற்போது இல்லை, எனினும் விரைவிலேயே எச்சரிக்கை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் கைவசம் உள்ளன என்று அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புவி விஞ்ஞானத்துறை மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் மக்களவையில் இன்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
அனைத்தும் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எச்சரிக்கைகளை முன்கூட்டியே அளித்து வருகிறோம். பூகம்பங்களை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பங்கள் இப்போதைக்கு இல்லை என்றே கூற வேண்டும்.
முடிந்த வரை தகவல்களை, எச்சரிக்கைகளை விரைவில் அளித்து வருகிறோம், சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேபாள பிரதமரை விட முன்கூட்டியே தகவல் கிடைத்துவிட்டது.
இந்த விஷயத்தில் நாடு அசாதாரண முன்னேற்றம் கண்டுள்ளது.
புவி விஞ்ஞானத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா பின் தங்கிவிடவில்லை. அதேபோல் வானிலை அறிவிப்பு, பருவநிலை திடீர் மாற்றங்களைக் கூட விரைவில் அறிவித்து எச்சரிக்கை செய்து வரப்படுகிறது.
அதே போல் விவசாயத்தைப் பாதிக்கும் திடீர் புயற்காற்று போன்றவற்றை தடுக்க முடியாது, ஆனால் அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க வழியுண்டு இதற்காக இதில் தொழில்நுட்ப முன்னேற்றம் கொண்ட நாடுகள் சிலவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்”
இவ்வாறு கூறியுள்ளார் ஹர்ஷ வர்தன்.